மாலையம்மையின் புதல்வரான குலசேகர பாண்டியன் கொல்லம் 422(கிபி1266)இல் குலசேகரப்பாண்டியன்,முத்தும்பெருமாள் முகிலம்பெருமாள்,பாண்டிபெருமாள்,முடி சூடும் பெருமாள், ஆகிய சகோதரர்களான ஐவராஜாக்கள் குலசேகரபாண்டியன் தலைமையில் வள்ளியூரில் கோட்டை அமைத்து ஆண்டு வந்தனர்.


ஐவராஜாக்கள் கதை பாடல் வரி எண் 2505-2508 வரை

பூவணி மாலைமார்பன் பொன்னுமுடிப் பாண்டியரும்

நல்ல கொல்லம் நானுற்று நாற்பத்திரெண்டா மாண்டதிலே

ஆவணி மூலத்திலே யடர்ந்த வெள்ளிக் கிழமையிலே


தமது கோட்டைக்கு குடிநீர் வசதிக்காக கோட்டைக்குள் நீராவி என்கிற ஒரு குளத்தை அமைத்து அந்த குளத்திற்கு வள்ளியூரின் மேற்கு திசையில் அமைந்துள்ள சீவலப்பேரி என்கிற பெரிய குளத்தில் வடக்கு பகுதியில் இருந்து முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு ரகசியமாக ஒரு கள்ள மடையையும் தண்ணீர் பாயும் ஓடையை பூமிக்கு அடியில் கோட்டையில் உள்ள நீராவி வரை அமைத்து இருந்தனர் .


ஐவராஜாக்கள் கதைப்பாடல் வரி எண்: 2529-2534 வரை

கோட்டைக்குள்ளே வெட்ன நீராவி தன்னிலே

குதிரைப்படைக்கும் குடிக்கத் தண்ணீர் வேனுமேன்பான்

மெய்ப்புடனே சீவலப்பேரிக்குளத்துத் தண்ணீர்

வெள்ளம் வந்து கோட்டைக்குள்ளே பாயவேனுமென்ன

அற்றபத்திலே கடுகத் திருநீலகண்டர்

ஆருமறியாமல் கள்ள மடை வைக்க வேனுமென்றார்


ஐவராஜாக்கள் கதைப்பாடல் வரி எண் 2545-2548 வரை

கன்னமிடுங் கல்வரைப்போல் ராவிருட்டி வேளை வெட்டி

கள்ளமடைத் தானும் வைத்துக் கற்பன் சொரி ஐயங்கோவில்

கல்ப்பூதந் தன்னையன்று காவலாகவே நிறுத்தி

காணாமல் தண்ணீர் வந்து கோட்டைக்குள்ளே பாய


இவ்வாறு அமைக்கப்பட்ட குடிநீர் செல்லும் மடை ஆரம்பிக்கும் பகுதிக்கு காவலாக கறுப்பன் சொறி அய்யன் கோவில் கங்காலநாதர் என்கிற பூதத்தை காவலாக வைத்தனர். குடிநீர் கோட்டைக்குள் வந்து விழும் நீராவியின் காவலாக ஒரு காவல் தெய்வத்தை வைக்க எண்ணம் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்துஅய்யனார் கோவிலுக்கு சென்றனர் . இந்த நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவு திருக்கோவில் அர்ச்சகர் கனவில் சொரிமுத்துஅய்யனார் தோன்றி, ” நாளை வள்ளியூரில் இருந்து ஐவராஜாக்கள் தங்கள் கோட்டையில் உள்ள நீராவிக்கு காவல்தெய்வம் பிரதிஷ்டை செய்திட எண்ணம் கொண்டு வருவார்கள் .அவர்களுடன் சங்கிலிபூதத்தாரையும்,சுடலைமாடனையும் பரிவார தேவதைகளையும் அனுப்பும் முகமாக ஒரு செப்பு குடத்தில் தாமிரபரணி நீர் நிரப்பி இரண்டு செந்தாமரை பூக்களையும் ஒரு வெண் தாமரை பூவையும் அவற்றுடன் பதினெட்டு வகை பூக்களையும் வைத்து பூஜை செய்து அந்த குடத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் எண்ணி வந்தது போல் உங்கள் கோட்டையில் சங்கிலிபூதத்தாருக்கும் பரிவார தேவதைகளுக்கும் ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்து வணங்கி வாருங்கள்;உங்கள் அரசாட்சிக்கும் நாட்டுக்கும் காவலாக நின்று மக்களை இங்கிருந்தே சொரிமுத்து ஐய்யனார் காப்பார் எனவும் கோட்டைக்கு காவலாக, சங்கிலி பூதத்தாரும்,நீராவிக்கு காவலாக சுடலை மாடனும் இருப்பர்; எனவும் கூறவும் மேலும் ”திருக்கோவிலில் நடத்தப்படும் எல்லா விழாவிலும் ஆரம்பத்தில் என்னை வந்து தரிசித்து அருள் பெற்றுச் செல்லுமாறு கூறுக”, என கூறி மறைந்தார், அர்ச்சகரும் அவ்வாறே செய்ய அந்த குடத்துடன் வள்ளியூர் கோட்டைக்கு வந்த ஐவராஜாக்கள் நீராவிக்கரையில், நீராவிக்கு காவலாக சங்கிலிபூதத்தாரையும்,சுடலைமாடனையும் பரிவார தேவதைகளையும் பிரதிஷ்டை செய்து வைத்து கோவில் மண்டபம் அமைத்து குடமுழுக்கு நிகழ்த்தி வழிப்பட்டு வந்தனர். அன்று முதல் இத்திருக்கோவில் ஐவராஜாக்கள் மண்டபம் நீராவிக்கரை சுடலை மாடசுவாமி என வழங்கழாயிற்று. இவ்வாறு சிறப்பாக கோட்டை அமைத்து ஆண்டு வரும் வேளையில் கன்னடிய அரசனின் மகள் குலசேகரப்பாண்டியனை திருமணம் கொள்ள விரும்பினாள். இதை அறிந்த கன்னடிய அரசன் குலசேகரபாண்டியனுக்கு தன் மகளை பட்டத்து ராணி யாக்கி கொண்டால் நாம் போரின்றி சமாதானமாக இருக்கலாம் என தூது அனுப்பினான். இதற்கு ஐவராஜாக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட கன்னடியர்கள் வள்ளியூரை ஓராண்டிற்க்கும் மேலாக முற்றுகையிட்டனர். இருந்தபோதும் ஐவராஜாக்களை அவர்களால் வெல்லமுடியவில்லை .இதற்கு காரணமான ஐவராஜாக்களின் குலதெய்வமான மூன்று யுகம் கண்ட அம்மன் காத்து வந்த ரகசியத்தை கன்னடியர்கள் தெரிந்து கொண்டு ஐவராஜாக்களை வெல்வதற்காக கோட்டைக்குள் ஒரு மாந்திரகனை அனுப்பி தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு காரணம் தங்களின் குலதெய்வம் தான் எனவும் அந்த அம்மனை கோட்டைக்கு வெளியே வைத்து விட்டால் வள்ளியூரை நிம்மதியாக ஆண்டு வரலாம் என சூழ்ச்சியாகக் கூற தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த மூன்று யுகம் கண்ட அம்மனை கோட்டையின் வடக்கு வாசலுக்கு வெளியே மாற்றி வைத்துவிட்டார்கள். இந்நிலையில் வள்ளியூரின் மேற்கு பகுதியில் சீவலப்பேரி குளத்தின் அருகில் முற்றுகையில் இருந்த கன்னடிய படை வீரர்களுக்கு ஆயர் குல பெண் ஒருத்தி தினமும் மோர் வியாபாரம் செய்து வரும் வேளையில் ஒரு நாள் அப்பெண் மோர் வியாபாரம் செய்ய பயன்படுத்தும் தங்க கிண்ணத்தை குளத்தில் தவறவிட்டு அழுது புலம்பி மறு நாள் அதே கிண்ணத்தில் மோர் வழங்குவதை கண்ட கன்னடிய வீரர்கள் அப்பெண்ணிடம் கேட்டபோது, கோட்டையில் உள்ள நீராவியில் எனது கிண்ணம் கிடைத்தது என கூற, வீரர்கள் கோட்டைக்கும் சிவலப்பேரி குளத்திற்கும் தொடர்பு இருப்பதாய் சந்தேகம் கொண்டு, கிண்ணம் விழுந்த இடத்தை காட்டுமாறு அப்பெண்ணிடம் கூற அவளும் வெகுளித்தனமாக கிண்ணம் விழுந்த இடத்தை காட்டினாள்.


ஐவராஜாக்கள் கதை பாடல் வரி எண் 4266-4267

காணாமல் போனதொருகண் மாணிக்க மென் குடுக்கை

காவலர்கள் நீரவிக்கரை தனிலே கண்டேன்


ஐவராஜாக்கள் கதை பாடல் வரி எண் 4295-4299

கற்பனை சொரி ஐயனுட காவல துவங் கடந்து

பள்ள மது மருகாலும் பதுங்கி மெல்ல தானடந்து

கள்ளமடை தன்னையங்கே சொல்ல மெள்ளச் சென்று

இவ்விடங் காண் என் குடுக்கை களைந்தவிடம் என்ன

என்று சொல்லி ஊழியக்காரர் மடைச் சுழியும் கண்டார்.


அங்கு குளத்து நீர் பூமிக்கு அடியில் பாய்வதைக் கண்டு அதன் மூலம் கோட்டைக்குள் தண்ணீர் செல்வதை அறிந்து, கோட்டைக்குள் தண்ணீர் இல்லாமல் வாழமுடியாது என்று கருதி அந்த மடையை அடைக்க முயன்றனர் .அது முடியாத காரணத்தினால் ஒரு மாந்திரிகனை சந்தித்து கேட்டபோது அந்த மடைக்கு காவலாக கங்காளநாதர் என்கிற பூதம் ஒன்று காவலாக இருக்கிறது, அதற்கு நரபலி கொடுத்தால் இந்த மடையை அடைத்து விடலாம் என்றான் .அதன் பிறகு கன்னடியர்கள் மோர் வியாபாரம் செய்து வரும் ஆயர் குல பெண்ணை நரபலி கொடுத்து அம்மடையை அடைத்தனர் .


ஐவராஜாக்கள் கதை பாடல் வரி எண் 4414-4419

இந்நிலமுங் கொண்டாட இஷ்டமுடன் பூதத்துக்கு

நானிலமுங் கொண்டாட நரபலியுந்தான் கொடுத்தான்

ஆனை தனையுமறுத்து அலங்காரபெலி கொடுத்தார்.

ஐவருந்தான் கோட்டைக்குள்ளே யடைபடவும் வேணுமென்று

கையர மாயடைபடுங்காண் கள்ளமடைப் பொழுது

அப்படியே செய்தபோது யடைபட்டுதாம் கள்ளமடை


அதன் பிறகும் ஓர் ஆண்டிற்கு பிறகு ஐவராஜாக்கள் வெளிவந்து திருவாங்கூர் சமஸ்தானம் சென்று அம்மன்னர் உதவியால் மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று அங்கு கோட்டை கட்டி வாழ்ந்து வந்தனர் .அதை அறிந்த கன்னடியர்கள் அங்கு படை எடுத்து சென்று போர் தொடுத்து குலசேகரப்பாண்டியனை கைது செய்தனர்.போரில் குலசேகரப்பாண்டியனின் சகோதரர்கள் உயிரிழந்தனர் .அந்தபோரில் தலை இல்லாத முண்டங்கள் ஒதுங்கிய இடம் தான் இன்று “முண்டந்துறை” என அழைக்கப்படுகிறது. குலசேகரபாண்டியனை கைது செய்து பல்லக்கில் கன்னடிய தேசம் கொண்டு செல்லும் வழியிலேயே குலசேகரப்பாண்டியன் வைர மோதிரத்தை உட்கொண்டு உயிரை விட்டார். இங்கு வந்து மறுநாள் கன்னடியர்கள் பல்லாக்கை இறக்கும் போது குலசேகரபாண்டியன் பிணமாக இருந்தார் .அந்த பிணத்துக்கும் கன்னடிய மன்னன் மகள் தாலி கட்டி அவரோடு உடன்கட்டை ஏறி தெய்வ நிலையை அடைந்தார் . ஐவராஜாக்கள் காலத்திற்கு பிறகு கோட்டைகளும் இத்திருக்கோவிலும் பழுதடைந்து பராமரிப்பின்றி பாளடைந்தது.அதற்கு பின் 1996ஆம் வருடம் திருப்பணிகள் செய்யப்பட்டு, 19-06-1996 ஆனி மாதம் 5ஆம் தேதி புதன் கிழமை அன்று முதல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது . 09-07-2008 ஆனி மாதம் 25ஆம் தேதி புதன் கிழமை அன்று இரண்டாம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஒரு காலத்தில் வள்ளியூர் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமங்களின் ஒன்றாகும், எனவே 2008 ஆம் ஆண்டு நடைப் பெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு இத்திருக்கோவிலில் சிறப்பு மலரை வெளியிட்டார் மாண்பு மிகு சமஸ்தானத்தில் 31வது பட்டம் தென்னாட்டு புலி நல்ல குத்தி சிவசுப்ரமணியகோமதிசங்கரஜெயதியாகமுத்து சண்முகசுந்தரமுருகதாசதீர்த்தபதி மகாராஜா அவர்கள்.