தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் தென்பாண்டி நாட்டில் கோட்டைக்கருங்குளம் ,வடக்கு விஜயநாராயணம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, சீவலப்பேரி சேரன்மகாதேவி , திருப்புடைமருதூர் ,திருவாலீஸ்வரம் ,மன்னார்கோவில் ,குற்றாலம் ,கங்கைகொண்டான் ,ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் காணப்படுகின்றன. இந்த அரசன் வள்ளியூருக்கு அருகில் உள்ள ராதாபுரம் என்ற ஊரை சீரமைத்துள்ளான். இவனது பெயரில் இவ்வூர் ராஜ ராஜேஸ்வரம் என்று வழங்கப்பட்டு நாளடையில் தற்பொழுது இராதாபுரம் என அழைக்கப்பட்டுவருகிறது. கிபி 1081ல் முதலாம் குலோத்துங்கனிடம் தோற்று ஓடிய ஐந்து பாண்டியர்களில் ஒருவரான குலசேகரபண்டியனின் புதல்வன் ஜடாவர்மன் என்ற திரிபுவனசக்ரவர்த்திஸ்ரீவல்லபதேவன் முதலாம் குலோத்துங்கனுக்கு கீழ் குறுநில மன்னனாக இருந்து வள்ளியூரில் அரண்மனை ஒன்றை அமைத்து இப்பகுதிகளை ஆட்சி செய்ததை கோட்டைக்கருங்குளம் சிவாலயம் கல்வெட்டும் தளபதிசமுத்திரம் திருநாகேஸ்வரன் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.